இக்கட்டான நிலையில் இஷாந்த்
ஒரு ஓவரில் இஷாந்த் சர்மாவின் நிலை தலைகீழாக மாறிவிட்டது. முன்னணி பந்துவீச்சாளராக இருந்த இவர், அணியில் இருந்து தூக்கி எறியப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 25. கடந்த 2007ல் தனது 19 வயதில் இந்திய அணியில் அறிமுகமானார். துவக்கத்தில் பவுன்சருடன் கூடிய, 145 கி.மீ., வேகத்தால் வீரர்களை மிரட்டினார்.
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கை, சொல்லி வைத்தது போல அவுட்டாக்கி விடுவார். இப்போது 25 வயது ஆன நிலையில், பவுலிங்கில் சோர்ந்து விட்டார்.
வழக்கமான வேகத்துக்குப் பதில் 130 முதல் 135 கி.மீ., வேகத்தில் மட்டுமே பவுலிங் செய்கிறார். சரியான அளவு மற்றும் நீளம் இல்லாததால், இவரால் "டெயிலெண்டகளை' கூட வீழ்த்த முடியவில்லை.
ஆஸ்திரேலிய தொடரில் மொத்தம் 3 போட்டியில் 24 ஓவர்கள் பவுலிங் செய்து, 189 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மூன்றாவது போட்டியில் ஒரு ஓவரில் 30 ரன்கள் விட்டுத்தர, இந்திய அணி தோற்க நேரிட்டது.
இதனால் அணியில் இருந்து எப்படியும் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி உள்ளிட்டோர் ஆதரவு கரம் நீட்ட, மீதமுள்ள 4 போட்டிகளுக்கான அணியில் மீண்டும் இடம்பெற்றார்.
இதனிடையே, கடந்த 23ம் தேதி நடந்த போட்டிக்காக, ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க மைதானத்தில், சக வீரர்களுடன் இஷாந்த் சர்மா பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மதியம் 12.30 மணி அளவில் அங்கு வந்த இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல், உறுப்பினர் சபா கரீம் ஆகியோர் இஷாந்த் சர்மாவை அழைத்தனர்.
பேசியது என்ன:
இதையடுத்து அங்கு சென்ற இஷாந்த் சர்மாவின் தோள் மேல் கையை வைத்து, சந்தீப் பாட்டீல் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். சபா கரீம், அருகில் இருந்து அமைதியாக தலையை அசைத்து கேட்டுக் கொண்டிருந்தார். அரைமணி நேரத்துக்குப் பின், அங்கிருந்து கிளம்பினர்.
பிறகு தான் அன்றைய போட்டியில் இஷாந்த் சர்மா சேர்க்கப்படவில்லை. அணியில் இருந்து வெளியேற்றும் முயற்சிக்கு, இது முதல் நடவடிக்கையாக இருக்கும் எனத் தெரிகிறது. இவரது இடத்தில் வந்த ஷமி, 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, இனி இந்திய அணியில் இஷாந்த் சர்மா இடம் பெறுவது கடினம் தான்.
shared via
No comments:
Post a Comment