இப்படி இருந்தால் எப்படி இஷாந்த்
பந்துவீச்சில் சொதப்பும் இஷாந்த் சர்மா, தனது பயிற்சியாளரை சந்தித்து ஆலோசனை கூட பெறுவதில்லையாம். இப்படி இருந்தால் தனது தவறுகளை எப்படி திருத்திக் கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 25. கடந்த 2007ல் தனது 19வயதில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் (மிர்புர்) அறிமுகம் ஆனார்.
துவக்கத்தில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், போகப் போக ஏமாற்றினார். இதன் உச்சக்கட்டமாக மொகாலி போட்டியில், ஒரு ஓவரில் 30 ரன்களை வாரி வழங்க, இந்திய அணி கடைசி நேரத்தில் வீழ்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டிக்கான அணியில் இவர் இடம் பெற்றதுதான் அதிசயம்.
இவரது பந்துவீச்சு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் கூறுகையில்,"" இஷாந்த் குறித்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
இவரது பவுலிங்கில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. தனது தவறுகளை சரிசெய்ய, அவர் தனது சொந்த பயிற்சியாளர் ஷரவண் குமாரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது,'' என்றார்.
ஆனால், இஷாந்த் சர்மாவை பொறுத்தவரை டில்லியில் உள்ள தனது வீட்டுக்கு மிக அருகில் வசிக்கும் ஷரவண் குமாரை சந்திப்பதே கிடையாதாம்.
2007க்குப் பின், கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை கூட சந்தித்து ஆலோசனை பெறவில்லை. டில்லியில் சொந்தமாக கிரிக்கெட் அகாடமி வைத்துள்ள இஷாந்த், அங்கு வந்து பயிற்சி செய்து கொள்வாராம்.
இதுகுறித்து ஷரவண் குமாரிடம் கேட்ட போது, திருப்தியான பதில் தரவில்லை. அவர் கூறுகையில்,"" சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடத் துவங்கிய பின், அவர் இங்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன,'' என்றார்.
அடுத்து தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணியில் இஷாந்த் இடம் பெறுவது கடினம்தான். இந்நிலையில், இவருக்கு யார் உதவ முன் வருவர் என்றே தெரியவில்லை. இந்திய பவுலிங் பயிற்சியாளர் ஜோ டேவ்ஸ் என்ன செய்கிறார் என்று யாருக்கும் புரியவில்லை.
shared via
No comments:
Post a Comment