சச்சின் ஆசை நிறைவேறுமா?
by Tamilan
விளையாட்டு உலகம்Today,
எதிர்பார்த்தது போலவே சச்சின் தனது 200வது டெஸ்ட் போட்டியை, சொந்த ஊரான மும்பையில் விளையாட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. இதுவரை 198 டெஸ்டில் விளையாடி உள்ள இவர், அடுத்து நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம், 200வது டெஸ்டில் விளையாட உள்ளார்.
இப்போட்டியுடன் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டியில் இருந்து ஒட்டுமொத்தமாக விடைபெற உள்ளார்.
இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ., 6-10ம் தேதிகளிலும், இரண்டாவது டெஸ்ட் நவ., 14-18ம் தேதிகளிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் போட்டிகளை எங்கு நடத்துவது என இன்னும் முடிவாகவில்லை.
இந்நிலையில், வரும் அக்., 22ம் தேதி ராஜிவ் சுக்லா தலைமையிலான இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,), தொடர் மற்றும் அட்டவணை ஒருங்கிணைப்பு கமிட்டியின் கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில், போட்டிகளை எங்கு நடத்துவது என முடிவு செய்யப்படும்.
சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை, கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் அல்லது அவரது சொந்த ஊரான மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், மும்பையில் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.,) தலைவர் ரவி சாவந்த் கூறுகையில், ""கடைசி போட்டியை சொந்த ஊரான மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடத்த, பி.சி.சி.ஐ.,யிடம் சச்சின் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மும்பையில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
Show commentsOpen link
No comments:
Post a Comment