சச்சின் இடத்தை நிரப்ப முடியாது
by Tamilan
விளையாட்டு உலகம்
கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் 200–வது டெஸ்டுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
1989–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அப்போது அவருக்கு 16 வயது. 1990–ம் ஆண்டு இங்கிலாந்து எதிரான போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
தனது அதிரடி ஆட்டம் மூலம் ரசிகர்கள் ஈர்த்த அவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக சதம், அதிக ரன், ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என எண்ணற்ற சாதனைகளை தனக்குள் வைத்துள்ளார் சச்சின்.
எதிரணி பந்து வீச்சாளர்களை தனது பேட் மூலம் மிரட்டினார். ஆனால் சமீப காலங்களாக அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. கடைசியாக 2011–ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்தார். கடந்த 2½ ஆண்டாக அவர் சதம் அடிக்கவில்லை.
198 டெஸ்டில் விளையாடி 51 சதம், 67 அரை சதத்துடன் 15,837 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 49 சதம், 96 அரை சதத்துடன் 18,426 ரன்னும் எடுத்து உள்ளார்.
24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் அசத்திய அவரது இடத்தை நிரப்புவது என்பது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை.
தெண்டுல்கர் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து வருமாறு:–
கவாஸ்கர்: தெண்டுல்கர் ஓய்வால் பெரிய வெற்றிடம் விழும். அந்த இடத்தை நிரப்புவது என்பது எளிதான விஷயம் அல்ல. டெஸ்ட் போட்டியில் சச்சின் இறங்கும் 4–வது வரிசை இடத்தை நிரப்புவது கடினமானது.
கங்குலி: சரியான நேரத்தில் சச்சின் ஓய்வு முடிவு எடுத்து இருக்கிறார். அவர் கடைசியாக விளையாடும் 2 டெஸ்ட்டை அதிக மக்கள் நேரில் காண வேண்டும்.
அசாருதீன்: அவரது இந்த முடிவுக்கு நாம் மதிப்பு அளிக்க வேண்டும். அவரது ஆட்டம் நமக்கு சந்தோஷத்தையும், பெருமையையும் அளித்துள்ளது.
ஸ்ரீகாந்த்: சச்சின் தெண்டுல்கர் இடத்தை நிரப்புவது கடினம். ஒரு ஆட்டத்தில் சதம் அடிப்பது பெரிய விஷயம். ஆனால் அவர் சர்வதேச போட்டியில் 100 சதம் அடித்து உள்ளார்.
லட்சுமணன்: இது அவரது சொந்த முடிவு. அதற்கு மதிப்பு அளிக்க வேண்டும். இது ஓய்வுக்கு சரியான நேரம் என்று உணர்ந்திருக்கிறார். சச்சினுடன் ஒன்றாக விளையாடியது மகிழ்ச்சியான அனுபவம்.
Show commentsOpen link
No comments:
Post a Comment