விடைபெற்றனர் சச்சின், டிராவிட்
by Tamilan
விளையாட்டு உலகம்
சாம்பியன்ஸ் லீக் கோப்பையை மும்பை அணி இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ராஜஸ்தான் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது.
இப்போட்டியுடன் இந்திய கிரிக்கெட்டின் இரு "இமயங்களான' சச்சின், டிராவிட் "டுவென்டி-20' அரங்கில் இருந்து விடைபெற்றனர்.
இந்தியாவில் ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் தொடர் நடந்தது. நேற்று இரவு டில்லியில் நடந்த பைனலில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் டிராவிட் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
சச்சின் உணர்ச்சிவசம்:
மும்பை அணிக்கு டுவைன் ஸ்மித், சச்சின் சேர்ந்து நல்ல துவக்கம் தந்தனர். பால்க்னர் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்தார் ஸ்மித். மறுபக்கம் வாட்சன் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்த சச்சின், அடுத்த பந்தில் 15 ரன்களில் போல்டானார். தனது கடைசி "டுவென்டி-20 போட்டியில் விளையாடிய இவர், ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்.
டாம்பே அசத்தல்:
தனது அதிரடியை தொடர்ந்த ஸ்மித், வாட்சன் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடிக்க, அரங்கம் அதிர்ந்தது. இதையடுத்து 42 வயதான "சுழல்' நாயகன் பிரவின் டாம்பேவை அழைத்தார் டிராவிட். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. டாம்பே வலையில் ஸ்மித் (44) சிக்கினார்.
அடுத்து வந்த ரோகித் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது. ராயுடு (29), டாம்பே பந்தில் அவுட்டானார். பால்க்னர் பந்தில் போலார்டு(15) போல்டானார். ரோகித் 33 ரன்களில் அவுட்டானார்.
மேக்ஸ்வெல் விளாசல்:
கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல் கலக்கினார். ராஜஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த இவர், பால்க்னர் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். பின் வந்த சுக்லாவின் பந்துவீச்சில் சிக்சர், பவுண்டரி விளாசினார்.
பால்க்னர் வீசிய போட்டியின் 19வது ஓவரில் மேக்ஸ்வெல் இரண்டு பவுண்டரி, தினேஷ் கார்த்திக் ஒரு சிக்சர் அடித்து, துவம்சம் செய்தனர். மேக்ஸ்வெல்(37) ரன் அவுட்டானார். கடைசி 8 ஓவரில் மட்டும் 121 ரன்கள் எடுக்கப்பட்டன. மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் சார்பில் டாம்பே அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார்.
சாம்சன் அதிரடி:
கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு குசால் பெரேரா(8) வீணாக ரன் அவுட்டாகி, ஏமாற்றினார். பின் ரகானே, இளம் சஞ்சு சாம்சன் சேர்ந்து அசத்தினர். மும்பை பந்துவீச்சை தவிடுபொடியாக்கிய இவர்கள், பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்தனர்.
ஹர்பஜன், தவான், கூல்டர் என யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கினர். இதனால் என்ன செய்வதென்று விழித்தார் மும்பை கேப்டன் ரோகித் சர்மா. இந்த நேரத்தில் அதிரடியாக அரைசதம் கடந்த சாம்சன்(60), ஓஜா பந்தில் அவுட்டாக சிக்கல் ஏற்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்சன்(8), ஹர்பஜனிடம் சரணடைந்தார். பொறுப்பாக ஆடிய ரகானே இன்னொரு முறை அரைசதம் கடந்தார்.
ஹர்பஜன் திருப்புமுனை:
போட்டியின் 17வது ஓவரை வீசிய ஹர்பஜன் 3 விக்கெட் வீழ்த்தி, திருப்புமுனை ஏற்படுத்தினார். முதல் பந்தில் "ஆபத்தான' ரகானேவை(65) அவுட்டாக்கினார். 4வது பந்தில் பின்னி(10) போல்டானார். 6வது பந்தில் கூப்பர்(4) வெளியேற, ஆட்டம் மும்பை வசம் வந்தது.
டிராவிட் "குட்பை':
"பேட்டிங்' வரிசையில் பின்னதாக வந்த டிராவிட்(1), கூல்டர் பந்தில் போல்டானார். கடைசி போட்டியில் விளையாடிய இவரும் ரசிகர்களிடம் இருந்து பிரியாவிடைபெற்று, பெவிலியன் திரும்பினார்.
பின் போலார்டு ஓவரில் யாக்னிக்(6), சுக்லா(0), பால்க்னர்(2) உள்ளிட்ட "டெயிலெண்டர்கள்' வெளியேற, ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் இரண்டாம் இடம் பெற்று ஆறுதல் தேடியது.
Show commentsOpen link
No comments:
Post a Comment