சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கடைசி லீக்கில் சென்னை டிரினிடாட் இன்று மோதல் Champions league cricket Chennai Trinidad match today
Tamil NewsYesterday,
புதுடெல்லி, அக்.2-
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் 10 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவு பெறுகிறது.
இன்றிரவு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் கடைசி லீக்கில் சென்னை சூப்பர் கிங்சும், வெஸ்ட் இண்டீசை சேர்ந்த டிரினிடாட் அண்ட் டொபாக்கோ (பி பிரிவு) அணியும் மோதுகின்றன. 3 வெற்றியுடன் அரைஇறுதியை ஏற்கனவே உறுதி செய்து விட்ட பலம் வாய்ந்த சென்னை அணி வெற்றிப்பயணத்தை தொடரும் உத்வேகத்தில் தீவிரமாக இருக்கிறது. என்றாலும் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். இதுரை களம் இறங்காத பாப் டு பிளிஸ்சிஸ், கிறிஸ் மோரிஸ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். சென்னை பேட்ஸ்மேன்களுக்கு, டிரினிடாட்டின் சுழல் மன்னன் சுனில் நரின் கடும் சவாலாக இருப்பார் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
தினேஷ் ராம்டின் தலைமையிலான டிரினிடாட் அணி 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 8 புள்ளிகளுடன் (ரன்ரேட் +0.407) உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரைஇறுதியை எட்டிவிடலாம். மாறாக தோற்றால் டிரினிடாட் அணியும், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டைட்டன்ஸ் அணியும் தலா 8 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இரண்டில் ஒரு அணி அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
டைட்டன்ஸ் அணியின் ரன்ரேட் விகிதம் டிரினிடாட்டை விட குறைவாகவே (ரன்ரேட் +0.228) இருக்கிறது. எனவே டிரினிடாட் அணி படுதோல்வியை சந்திக்காமல் இருந்தாலே அரைஇறுதிக்கு வந்து விடலாம். மொத்தத்தில் டைட்டன்சின் தலைவிதி இப்போது டோனி தலைமையிலான சென்னை அணியின் கையில் இருக்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக மாலை 4 மணிக்கு இதே மைதானத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சைமன் கேடிச் தலைமையிலான பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியும் (ஏ பிரிவு) சந்திக்கின்றன.
6 புள்ளிகளுடன் (ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை) உள்ள மும்பை அணி இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும். அதுவும் இமாலய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் அரைஇறுதி வாய்ப்பு கிட்டும்.
மும்பை வெற்றி பெறும் பட்சத்தில் இந்த பிரிவில் மும்பை, ஒட்டாகோ அணிகள் தலா 10 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது ரன்ரேட்டில் முன்னிலை வகிக்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு வழங்கப்படும். தற்போதைய நிலையில் ஒட்டாகோவின் ரன்ரேட் +0.869 ஆகவும், மும்பை அணியின் ரன்ரேட் விகிதம் +0.090 ஆகவும் இருக்கிறது.
தனது கடைசி 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் சச்சின் தெண்டுல்கர் 5 மற்றும் 15 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இன்னும் 26 ரன்கள் எடுத்தால் அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் 50 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற சிறப்பை தெண்டுல்கர் பெறுவார். அந்த மைல்கல்லையாவது இந்த ஆட்டத்தில் அவர் அடைவாரா? என்பதை பார்க்கலாம்.
இரு ஆட்டங்களையும் ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment