சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அரைஇறுதிக்கு முன்னேறியது Champions league cricket Mumbai Indians Progressed to the semi final
Tamil NewsYesterday,
புதுடெல்லி, அக்.3-
இந்தியாவில் நடந்து வரும் 5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியும் (ஏ பிரிவு) மோதின.
டாஸ் ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா பெர்த் அணியை முதலில் பேட் செய்ய பணித்தார். இதன்படி பேட் செய்த பெர்த் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. சாம் ஒயிட்மேன் 51 ரன்களும் (32 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஆஷ்டன் அகர் 35 ரன்களும், கார்ட்ரைட் 28 ரன்களும், கேப்டன் சைமன் கேடிச் 13 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் நாதன் கவுல்டர் நிலே 3 விக்கெட்டுகளும், பிரக்யான் ஓஜா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மும்பை அணி மட்டும் பீல்டிங்கில் பிரமாதப்படுத்தி இருந்தால், பெர்த் அணியை இதைவிட குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தியிருக்கலாம். குறிப்பாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், தனது பக்கம் 3 பவுண்டரிகளை வீணாக விட்டதுடன், ஒரு எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பையும் கோட்டை விட்டார். இதே போல் ஹர்பஜன்சிங்கும் பீல்டிங் குறைபாட்டினால் தடுக்க வேண்டிய பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டார்.
அடுத்து 150 ரன்கள் இலக்கை 14.2 ஓவருக்குள் எட்டினால் மட்டுமே அரைஇறுதி கனவு நிறைவேறும் என்ற பலத்த நெருக்கடியுடன் மும்பை இந்தியன்சின் இன்னிங்சை சச்சின் தெண்டுல்கரும், வெய்ன் சுமித்தும் தொடங்கினர். தொடர்ந்து சொதப்பி வரும் தெண்டுல்கர் இந்த முறையும் ரன் கணக்கை தொடங்கும் முன்பே நடையை கட்டினார். ஆனால் சுமித் அணியை தூக்கி நிறுத்தினார். சிக்சரும், பவுண்டரியுமாக அடித்து நொறுக்கிய அவர் ரன்ரேட்டை சராசரியாக 10 ரன்களுக்கு மேலாக கொண்டு சென்றார். இதற்கிடையே 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய கிளைன் மேக்ஸ்வெல் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து கேப்டன் ரோகித் ஷர்மா களம் புகுந்தார். ரோகித் ஷர்மாவின், பேட் கதகளி ஆடியது. இமாலய சிக்சர்களை தூக்கியடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். 'பவர்-பிளே'யான முதல் 6 ஓவர்களில் மட்டும் 66 ரன்களை திரட்டிய மும்பை அணியின் ரன்வேட்டை 'எக்ஸ்பிரஸ்' வேகத்தில் முன்னேறியதால் தங்குதடையின்றி இலக்கை நோக்கி பயணித்தது.
அதிரடி காட்டிக் கொண்டிருந்த வெய்ன் சுமித் 48 ரன்களில் (25 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அவருக்கு பிறகு வந்த கீரன் பொல்லார்ட் தனது பங்குக்கு 23 ரன்கள் (18 பந்து) எடுத்தார். என்றாலும் மறுமுனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடிய கேப்டன் ரோகித் ஷர்மா, அணியை பக்குவமாக கரைசேர்ப்பதில் கச்சிதமாக செயல்பட்டார். இறுதி கட்டத்தில் அம்பத்தி ராயுடு தொடர்ந்து 2 சிக்சர்கள் விளாசி தித்திப்புடன் முடித்து வைத்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 152 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் ஷர்மா 51 ரன்களுடன் (24 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 10 புள்ளிகளுடன் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்தது. ஏ பிரிவில் மும்பை, ஒட்டாகோ அணிகள் தலா 10 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்த போதிலும், ரன்ரேட்டில் மும்பையின் கை ஓங்கியதால் அந்த அணி அரைஇறுதி வாய்ப்பை தட்டிச் சென்றது. ஒட்டாகோ அணி வெளியேறியது.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment