சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: டிரினிடாட் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி Champions league cricket Trinidad team win
Tamil NewsYesterday,
புதுடெல்லி, அக்.3-
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த கடைசி லீக்கில் சென்னை சூப்பர் கிங்சும், வெஸ்ட் இண்டீசை சேர்ந்த டிரினிடாட் அண்ட் டொபாக்கோவும் பலப்பரீட்சை நடத்தின.
டாசில் ஜெயித்த டிரினிடாட் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து மைக் ஹஸ்சியும், முரளிவிஜயும் சென்னை அணியின் பேட்டிங்கை தொடங்கினர். 2-வது ஓவரிலேயே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஹஸ்சி (1 ரன்) வேகப்பந்து வீச்சாளர் ராம்பாலின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். இதன்பின்னர் விஜயும், சுரேஷ் ரெய்னாவும் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். ஒரு கட்டத்தில் சென்னை அணி ஒரு விக்கெட்டுக்கு 62 ரன்களுடன் (8 ஓவர்) நல்ல நிலையில் தான் இருந்தது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ஆட்டம் இப்படி தலைகீழாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
விஜய் 27 ரன்களில் (24 பந்து, 4 பவுண்டரி), லென்டில் சிமோன்சின் பந்து வீச்சில் போல்டு ஆனார். சிறிது நேரத்தில் ரெய்னாவும் (38 ரன், 29 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்ப, சென்னை அணியின் விக்கெட்டுகள் சீட் கட்டு போல் மளமளவென சரிந்தன. கேப்டன் டோனி (25 ரன், 25 பந்து) மட்டும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கில் 'விக்கெட் அணிவகுப்பு' நடத்தினர். இதில் 3 பேர் ரன்-அவுட் ஆனதும் பின்னடைவாக அமைந்தது.
முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த சீசனில் சென்னை அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும்.
அடுத்து களம் இறங்கிய டிரினிடாட் அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது. தொடக்க ஆட்டக்காரர் லென்டில் சிமோன்ஸ் 63 ரன்கள் (41 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். இந்த வெற்றியின் மூலம் டிரினிடாட் அணி அரைஇறுதியை எட்டியது.
4-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். இந்த படுதோல்வியால் சென்னை அணி பி பிரிவில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அரைஇறுதியில் சென்னை அணி ராஜஸ்தான் ராயல்சை நாளை எதிர்கொள்கிறது.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment